திருஓணகாந்தன்றளி பண் - இந்தளம்
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.5 திருஓணகாந்தன்றளி பண் - இந்தளம்
சுந்தரமூர்த்தி நாயனார்
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு நித்தல் பூசை செய்ய லுற்றார் கையி லொன்றுங் காண மில்லைக் கழல டிதொழு துய்யி னல்லால் ஐவர் கொண்டிங் காட்ட ஆடி ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக் குய்யு மாறொன் றருளிச் செய்யீர் ஓண காந்தன் றளியு ளீரே.
திங்கள் தங்கு சடைக்கண் மேலோர் திரைகள் வந்து புரள வீசுங் கங்கை யாளேல் வாய்தி றவாள் கணப தியேல் வயிறு தாரி அங்கை வேலோன் குமரன் பிள்ளை தேவி யார்கொற் றட்டி யாளால் உங்க ளுக்காட் செய்ய மாட்டோ ம் ஓண காந்தன் றளியு ளீரே.
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி யுங்கழல் ஏத்து வார்கள் மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி மதியு டையவர் செய்கை செய்யீர் அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆவற் காலத் தடிகேள் உம்மை ஒற்றி வைத்திங் குண்ண லாமோ ஓண காந்தன் றளியு ளீரே.
வல்ல தெல்லாஞ் சொல்லி யும்மை வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன் றில்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்ப தென்னீர் பல்லை யுக்கப் படுத லையிற் பகலெ லாம்போய்ப் பலிதி ரிந்திங் கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓண காந்தன் றளியு ளீரே.
கூடிக் கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைப டாமே ஆடிப் பாடி அழுது நெக்கங் கன்பு டையவர்க் கின்பம் ஓரீர் தேடித் தேடித் திரிந்தெய்த் தாலுஞ் சித்தம் என்பால் வைக்க மாட்டீர் ஓடிப் போகீர் பற்றுந் தாரீர் ஓண காந்தன் றளியு ளீரே.
வாரி ருங்குழல் வாணெ டுங்கண் மலைம கள்மது விம்மு கொன்றைத் தாரி ருந்தட மார்பு நீங்காத் தைய லாளுல குய்ய வைத்த காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க் காமக் கோட்டம் உண்டாக நீர்போய் ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே ஓண காந்தன் றளியு ளீரே.
பொய்ம்மை யாலே போது போக்கிப் புறத்தும் இல்லை அகத்தும் இல்லை மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர் மேலை நாளொன் றிடவுங் கில்லீர் எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர் உம்மை என்றே எம்பெ ருமான் ஓண காந்தன் றளியு ளீரே.
வலையம் வைத்த கூற்ற மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டுச் சிலைய மைத்த சிந்தை யாலே திருவ டிதொழு துய்யி னல்லாற் கலைய மைத்த காமச் செற்றக் குரோத லோப மதம வருடை உலைய மைத்திங் கொன்ற மாட்டேன் ஓண காந்தன் றளியு ளீரே.
வார மாகித் திருவ டிக்குப் பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே ஆரம் பாம்பு வாழ்வ தாரூர் ஒற்றி யூரேல் உம்ம தன்று தார மாகக் கங்கை யாளைச் சடையில் வைத்த அடிகேள் உந்தம் ஊருங் காடு உடையுந் தோலே ஓண காந்தன் றளியு ளீரே.
ஓவ ணமேல் எருதொன் றேறும் ஓண காந்தன் றளியு ளார்தாம் ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட வரைது கிலொடு பட்டு வீக்கிக் கோவ ணமேற் கொண்ட வேடங் கோவை யாகவா ரூரன் சொன்ன பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப் பறையுந் தாஞ்செய்த பாவந் தானே.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - ஓணகாந்தீசுவரர், தேவியார் - காமாட்சியம்மை.