திருப்பருப்பதம் பண் - நட்டபாடை
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.79 திருப்பருப்பதம் பண் - நட்டபாடை
சுந்தரமூர்த்தி நாயனார்
மானும்மரை இனமும்மயில் இனமுங்கலந் தெங்குந் தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப் பூமாமரம் உரிஞ்சிப்பொழி லூடேசென்று புக்குத் தேமாம்பொழில் நீழல்துயில் சீபர்ப்பத மலையே.
மலைச்சாரலும் பொழிற்சாரலும் புறமேவரும் இனங்கள் மலைப்பாற்கொணர்ந் திடித்தூட்டிட மலங்கித்தன களிற்றை அழைத்தோடியும் பிளிறீயவை அலமந்துவந் தெய்த்துத் திகைத்தோடித்தன் பிடிதேடிடுஞ் சீபர்ப்பத மலையே.
மன்னிப்புனங் காவல்மட மொழியாள்புனங் காக்கக் கன்னிக்கிளி வந்துகவைக் கோலிக்கதிர் கொய்ய என்னைக்கிளி மதியாதென்று எடுத்துக்கவண் ஒலிப்பத் தென்னற்கிளி திரிந்தேறிய சீபர்ப்பத மலையே.
மையார்தடங் கண்ணாள்மட மொழியாள்புனங் காக்கச் செவ்வேதிரிந் தாயோவெனப் போகாவிட விளிந்து கைபாவிய கவணால்மணி எறியஇரிந் தோடிச் செவ்வாயன கிளிபாடிடுஞ் சீபர்ப்பத மலையே.
ஆனைக்குலம் இரிந்தோடித்தன் பிடிசூழலிற் றிரியத் தானப்பிடி செவிதாழ்த்திட அதற்குமிக இரங்கி மானக்குற அடல்வேடர்கள் இலையாற்கலை கோலித் தேனைப்பிழிந் தினிதூட்டிடுஞ் சீபர்ப்பத மலையே.
மாற்றுக்களி றடைந்தாயென்று மதவேழங்கை யெடுத்தும் ஊற்றித்தழல் உமிழ்ந்தும்மதம் பொழிந்தும்முகஞ் சுழியத் தூற்றத்தரிக் கில்லேனென்று சொல்லிஅயல் அறியத் தேற்றிச்சென்று பிடிசூழறுஞ் சீபர்ப்பத மலையே.
அப்போதுவந் துண்டீர்களுக் கழையாதுமுன் னிருந்தேன் எப்போதும்வந் துண்டாலெமை எமர்கள்சுழி யாரோ இப்போதுமக் கிதுவேதொழில் என்றோடியக் கிளியைச் செப்பேந்திள முலையாள்எறி சீபர்ப்பத மலையே.
திரியும்புரம் நீறாக்கிய செல்வன்றன கழலை அரியதிரு மாலோடயன் றானும்மவர் அறியார் கரியின்னினம் ஓடும்பிடி தேனுண்டவை களித்துத் திரிதந்தவை திகழ்வாற்பொலி சீபர்ப்பத மலையே.
ஏனத்திரள் கிளைக்கஎரி போலமணி சிதறத் தீயென்றவை மலைச்சாரலிற் றிரியுங்கர டீயும் மானும்மரை இனமும்மயில் மற்றும்பல வெல்லாந் தேனுண்பொழில் சோலைமிகு சீபர்ப்பத மலையே.
நல்லாரவர் பலர்வாழ்தரு வயல்நாவல வூரன் செல்லல்லுற அரியசிவன் சீபர்ப்பத மலையை அல்லலவை தீரச்சொன தமிழ்மாலைகள் வல்லார் ஒல்லைச்செல உயர்வானகம் ஆண்டங்கிருப் பாரே.
இத்தலம் வடநாட்டிலுள்ளது. இது ஸ்ரீசைலம் என்றும் மல்லிகார்ச்சுனம் என்றும் பெயர்பெறும். சுவாமிபெயர் - பருவதநாதர், தேவியார் - பருவதநாயகியம்மை.