Skip to content
Thevaram

ஏழாம் திருமுறை – திருப்பாட்டு

7.83 திருவாரூர் பண் - புறநீர்மை

சுந்தரமூர்த்தி நாயனார்

7.83

திருவாரூர் பண் - புறநீர்மை

842

அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லி முந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன் சிந்தை பராமரியாத் தென்றிரு வாரூர்புக் கெந்தை பிரானாரை யென்றுகொல் எய்துவதே.

843

நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதுந் துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்து தென்றல் மணங்கமழுந் தென்றிரு வாரூர்புக் கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே.

844

முன்னை முதற்பிறவி மூதறி யாமையினாற் பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச் செந்நெல் வயற்கழனித் தென்றிரு வாரூர்புக் கென்னுயிர்க் கின்னமுதை என்றுகொல் எய்துவதே.

845

நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக் கொல்ல நினைப்பனவுங் குற்றமும் அற்றொழியச் செல்வ வயற்கழனித் தென்றிரு வாரூர்புக் கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே.

846

கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன் சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றலைவாய் அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக் கிடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே.

847

சூழொளி நீர்நிலந்தீத் தாழ்வளி ஆகாசம் வானுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள் ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக் கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே.

848

கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்த வம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமராச் செம்பொனை நன்மணியைத் தென்றிரு வாரூர்புக் கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே.

849

ஆறணி நீண்முடிமேல் ஆடர வஞ்சூடிப் பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சரவன் சேறணி தண்கழனித் தென்றிரு வாரூர்புக் கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே.

850

மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல் அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடுந் திண்ணிய மாமதில்சூழ் தென்றிரு வாரூர்புக் கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே.

851

மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரை நன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன் பன்னெடுஞ் சொல்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார் பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே.