திருவீழிமிழலை பண் - சீகாமரம்
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.88 திருவீழிமிழலை பண் - சீகாமரம்
சுந்தரமூர்த்தி நாயனார்
நம்பினார்க்கருள் செய்யுமந்தணர் நான்மறைக்கிட மாயவேள்வியுள் செம்பொ னேர்மடவாரணி பெற்ற திருமிழலை உம்பரார்தொழு தேத்தமாமலை யாளொடும்முட னேஉறைவிடம் அம்பொன் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
விடங்கொள்மாமிடற் றீர்வெள்ளைச்சுருளொன் றிட்டுவிட்ட காதினீரென்று திடங்கொள் சிந்தையினார் கலிகாக்குந் திருமிழலை மடங்கல்பூண்டவி மானம்மண்மிசை வந்திழிச்சிய வானநாட்டையும் அடங்கல் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
ஊனைஉற்றுயிர் ஆயினீரொளி மூன்றுமாய்த்தெளி நீரோடானஞ்சின் தேனை ஆட்டுகந்தீர் செழுமாடத் திருமிழலை மானைமேவிய கையினீர்மழு வேந்தினீர்மங்கை பாகத்தீர்விண்ணில் ஆன வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
பந்தம்வீடிவை பண்ணினீர்படி றீர்மதிப்பிதிர்க் கண்ணியீரென்று சிந்தை செய்திருக்குஞ் செங்கையாளர் திருமிழலை வந்துநாடகம் வானநாடியர் ஆடமாலயன் ஏத்தநாடொறும் அந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
புரிசைமூன்றையும் பொன்றக்குன்றவில் லேந்திவேதப் புரவித்தேர்மிசைத் திரிசெய் நான்மறையோர் சிறந்தேத்துந் திருமிழலைப் பரிசினாலடி போற்றும்பத்தர்கள் பாடியாடப் பரிந்துநல்கினீர் அரிய வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
எறிந்தசண்டி இடந்தகண்ணப்பன் ஏத்துபத்தர்கட் கேற்றம்நல்கினீர் செறிந்த பூம்பொழில் தேன்துளிவீசுந் திருமிழலை நிறைந்தஅந்தணர் நித்தநாடொறும் நேசத்தாலுமைப் பூசிக்கும்மிடம் அறிந்து வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
பணிந்தபார்த்தன் பகீரதன்பல பத்தர்சித்தர்க்குப் பண்டுநல்கினீர் திணிந்த மாடந்தொறுஞ் செல்வம்மல்கு திருமிழலை தணிந்தஅந்தணர் சந்திநாடொறும் அந்திவானிடு பூச்சிறப்பவை அணிந்து வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
பரந்தபாரிடம் ஊரிடைப்பலி பற்றிப்பார்த்துணுஞ் சுற்றமாயினீர் தெரிந்த நான்மறை யோர்க்கிடமாய திருமிழலை இருந்துநீர்தமி ழோடிசைகேட்கும் இச்சையாற்காசு நித்தல்நல்கினீர் அருந்தண் வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
தூயநீரமு தாயவாறது சொல்லுகென்றுமைக் கேட்கச்சொல்லினீர் தீயராக் குலையாளர் செழுமாடத் திருமிழலை மேயநீர்பலி ஏற்றதென்னென்று விண்ணப்பஞ்செய் பவர்க்குமெய்ப்பொருள் ஆய வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுதிரே.
வேதவேதியர் வேதநீதியர் ஓதுவார்விரி நீர்மிழலையுள் ஆதி வீழிகொண்டீர் அடியேற்கும் அருளுகென்று நாதகீதம்வண் டோ துவார்பொழில் நாவலூரன்வன் றொண்டன்நற்றமிழ் பாதம் ஓதவல்லார் பரனோடு கூடுவரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுசாம்பிகையம்மை.