Skip to content
Thevaram

ஏழாம் திருமுறை – திருப்பாட்டு

7.90 கோயில் பண் - குறிஞ்சி

சுந்தரமூர்த்தி நாயனார்

7.90

கோயில் பண் - குறிஞ்சி

913

மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந் தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் கடுத்தாடுங் கரதலத்திற் றமருகமும் எரிஅகலுங் கரியபாம்பும் பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.

914

பேராது காமத்திற் சென்றார்போல் அன்றியே பிரியா துள்கிச் சீரார்ந்த அன்பராய்ச் சென்றுமுன் னடிவீழுந் திருவி னாரை ஓராது தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் பேராளர் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.

915

நரியார்தங் கள்ளத்தாற் பக்கான பரிசொழிந்து நாளும் உள்கிப் பிரியாத அன்பராய்ச் சென்றுமுன் அடிவீழுஞ் சிந்தை யாரைத் தரியாது தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் பெரியோர்கள் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.

916

கருமையார் தருமனார் தமர்நம்மைக் கட்டியகட் டறுப்பிப் பானை அருமையாந் தன்னுலகந் தருவானை மண்ணுலகங் காவல் பூண்ட உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்னவரை மறுக்கஞ் செய்யும் பெருமையார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.

917

கருமானின் உரியாடைச் செஞ்சடைமேல் வெண்மதியக் கண்ணி யானை உருமன்ன கூற்றத்தை உருண்டோ ட உதைத்துகந் துலவா இன்பம் தருவானைத் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் பெருமானார் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.

918

உய்த்தாடித் திரியாதே உள்ளமே ஒழிகண்டாய் ஊன்கண் ஓட்டம் எத்தாலுங் குறைவில்லை என்பர்காண் நெஞ்சமே நம்மை நாளும் பைத்தாடும் அரவினன் படர்சடையன் பரஞ்சோதி பாவந் தீர்க்கும் பித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.

919

முட்டாத முச்சந்தி மூவா யிரவர்க்கு மூர்த்தி என்னப் பட்டானைப் பத்தராய்ப் பாவிப்பார் பாவமும் வினையும் போக விட்டானை மலையெடுத்த இராவணனைத் தலைபத்தும் நெரியக் காலால் தொட்டானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.

920

கற்றானுங் குழையுமா றன்றியே கருதுமா கருத கிற்றார்க் கெற்றாலுங் குறைவில்லை என்பர்காண் உள்ளமே நம்மைநாளுஞ் செற்றாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் பெற்றேறிப் புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.

921

நாடுடைய நாதன்பால் நன்றென்றுஞ் செய்மனமே நம்மை நாளுந் தாடுடைய தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் மோடுடைய சமணர்க்கும் முடையுடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த பீடுடைய புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.

922

பாரூரும் அரவல்குல் உமைநங்கை யவள்பங்கன் பைங்கண் ஏற்றன் ஊரூரன் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே.