Skip to content
Thevaram

ஏழாம் திருமுறை – திருப்பாட்டு

7.92 திருப்புக்கொளியூர் அவிநாசி பண் - குறிஞ்சி

சுந்தரமூர்த்தி நாயனார்

7.92

திருப்புக்கொளியூர் அவிநாசி பண் - குறிஞ்சி

933

எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெரு மானையே உற்றாயென் றுன்னையே உள்குகின் றேனுணர்ந் துள்ளத்தாற் புற்றா டரவா புக்கொளி யூரவி நாசியே பற்றாக வாழ்வேன் பசுபதி யேபர மேட்டியே.

934

வழிபோவார் தம்மோடும் வந்துடன் கூடிய மாணிநீ ஒழிவ தழகோ சொல்லாய் அருளோங்கு சடையானே பொழிலாருஞ் சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை இழியாக் குளித்த மாணியெ னைக்கிறி செய்ததே.

935

எங்கேனும் போகினும் எம்பெரு மானை நினைந்தக்காற் கொங்கே புகினுங் கூறைகொண் டாறலைப் பாரிலை பொங்கா டரவா புக்கொளி யூரவி நாசியே எங்கோ னேயுனை வேண்டிக்கொள் வேன்பிற வாமையே.

936

உரைப்பார் உரையுகந் துள்கவல் லார்தங்கள் உச்சியாய் அரைக்கா டரவா ஆதியும் அந்தமும் ஆயினாய் புரைக்காடு சோலைப் புக்கொளி யூரவி நாசியே கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.

937

அரங்காவ தெல்லா மாயிடு காடது வன்றியுஞ் சரங்கோலை வாங்கி வரிசிலை நாணியிற் சந்தித்துப் புரங்கோட எய்தாய் புக்கொளி யூரவி நாசியே குரங்காடு சோலைக் கோயில்கொண் டகுழைக் காதனே.

938

நாத்தா னும்உனைப் பாடலன் றிநவி லாதெனாச் சோத்தென்று தேவர் தொழநின்ற சுந்தரச் சோதியாய் பூத்தாழ் சடையாய் புக்கொளி யூரவி நாசியே கூத்தா உனக்குநான் ஆட்பட்ட குற்றமுங் குற்றமே.

939

மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறஞ் சந்திகள் தோறுஞ் சலபுட்பம் இட்டு வழிபடப் புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியே நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.

940

பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரைக் காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான் பூணாண் அரவா புக்கொளி யூரவி நாசியே காணாத கண்கள் காட்டவல் லகறைக் கண்டனே.

941

நள்ளாறு தெள்ளா றரத்துறை வாய்எங்கள் நம்பனே வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய் புள்ளேறு சோலைப் புக்கொளி யூரிற் குளத்திடை உள்ளாடப் புக்க மாணியென் னைக்கிறி செய்ததே.

942

நீரேற ஏறுநிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப் போரேற தேறியைப் புக்கொளி யூரவி நாசியைக் காரேறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய சீரேறு பாடல்கள் செப்பவல் லார்க்கில்லை துன்பமே.

இத்தலம் கொங்குநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அவிநாசியப்பர், தேவியார் - பெருங்கருணைநாயகி. இது முதலையுண்டபிள்ளையை அழைப்பித்தபதிகம்.