Skip to content
Thiruvisaippa & Thiruppallandu

திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா

2. கோயில் - உயர் கொடியாடை

திருமாளிகைத்தேவர்

2. கோயில் - உயர் கொடியாடை

12

உயர்கொடி யாடை மிடைபட லத்தின் ஓமதூ மப்பட லத்தின் பெயர்நெடு மாடத்(து) அகிற்புகைப் படலம் பெருகிய பெரும்பற்றப் புலியூர்ச் சியரொளி மணிகள் நிரந்துசேர் கனகம் நிறைந்தசிற் றம்பலக் கூத்தா ! மயர்வறும் அமரர் மகுடந்தோய் மலர்ச்சே வடிகள்என் மனத்துவைத் தருளே.

13

கருவளர் மேகத் தகடுதோய் மகுடக் கனகமா ளிகைகலந் தெங்கும் பெருவளர் முத்தீ நான்மறைத் தொழில்சால் எழில்மிகு பெரும்பற்றப் புலியூர்த் திருவளர் தெய்வப் பதிவிதி நிதியம் திரண்டசிற் றம்பலக் கூத்தா ! உருவளர் இன்பச் சிலம்பொலி அலம்பும் உன்னடிக் கீழ(து)என் னுயிரே.

14

வரம்பிரி வாளை மிளர்மிடுக் கமலம் கரும்பொடு மாந்துமே திகள்சேர் பரம்பிரி செந்நெல் கழனிச் செங்கழுநீர்ப் பழனம்சூழ் பெரும்பற்றப் புலியூர்ச் சிரம்புணர் முடிவா னவர்அடி முறையால் இறைஞ்சுசிற் றம்பலக் கூத்தா நிரந்தரம் முனிவர் நினைதிருக் கணைக்கால் நினைந்துநின்(று) ஒழிந்ததென் நெஞ்சே.

15

தேர்மலி விழவில் குழவொலி தெருவில் கூத்தொலி ஏத்தொலி ஒத்தின் பேரொலி பரந்து கடலொலி மலியப் பொலிதரு பெரும்பற்றப் புலியூர்ச் சீர்நில(வு) இலயத் திருநடத் தியல்பில் திழந்தசிற் றம்பலக் கூத்தா ! வார்மலி முலையாள் வருடிய திரள்மா மணிக்குறங்(கு) அடைந்ததென் மதியே.

16

நிறைதழை வாழை நிழற்கொடி நெடுந்தெங்(கு) இளங்கமுகு உளங்கொள்நீள் பலமாப் பிறைதவழ் பொழில்சூழ் கிடங்கிடைப் பதனம் முதுமதிற் பெரும்பற்றப் புலியூர்ச் சிறைகொள்நீர்த் தரளத் திரள்கொள்நித் திலத்த செம்பொற் சிற்றம்பலக் கூத்த ! பொறை யணி நிதம்பப் புலியதள் ஆடைக் கச்சுநூல் புகுந்ததென் புகலே.

17

அதுமதி இதுவென்(று) அலந்தலை நூல்கற்(று) அழைப்பொழிந்(து) அருமறை அறிந்து பிதுமதி வழிநின்(று) ஒழிவிலா வேள்விப் பெரியவர் பெரும்பற்றப் புலியூர்ச் செதுமதிச் சமணும் தேரரும் சேராச் செல்வச் சிற்றம்பலக் கூத்த ! மதுமதி வெள்ளத் திருவயிற்(று) உந்தி வளைப்புண்(டு)என் னுள்மகிழ்ந் ததுவே.

18

பொருவரைப் புயத்தின் மீமிசைப் புலித்தோல் பொடியணி பூணநூல் அகலம் பெருவரை புரைதிண் தோளுடன் காணப் பெற்றவர் பெரும்பற்றப் புலியூர்த் திருமரு(வு) உதரத் தார்திசை மிடைப்ப நடஞ்செய்சிற் றம்பலக் கூத்த ! உருமரு(வு) உதரத் தனிவடம் தொடர்ந்து கிடந்த(து)என் உணர்வுணர்ந்(து) உணர்ந்தே.

19

கணியெரி விசிறு கரம்துடி விடவாய்க் கங்கணம் செங்கைமற் றபயம் பிணிகெட இவைகண்(டு) அரன்பெரு நடத்திற் பிரிவிலார் பெரும்பற்றப் புலியூர்த் திணிமணி நீல கண்டத்(து)என் அமுதே ! சீர்கொள்சிற் றம்பலக் கூத்த ! அணிமணி முறுவல் பவளவாய்ச் செய்ய சோதியுள் அடங்கிற்(று)என் அறிவே.

20

திருநெடு மால்இந் திரன்அயன் வானோர் திருக்கடைக் காவலின் நெருக்கிப் பெருமுடி மோதி உருமணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றுப் புலியூர்ச் செருநெடு மேரு வில்லன்முப் புரம்தீ விரித்தசிற் றம்பலக் கூத்த ! கருவடி குழைக்கா(து) அமலச்செங் கமல மலர்முகம் கலந்த(து)என் கருத்தே.

21

ஏர்கொள்கற் பகம்ஒத்(து) இருசிலைப் புருவம் பெருந்தடங் கண்கள்மூன் றுடையான் பேர்கள்ஆ யிரம்நூராயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றுப் புலியூர்ச் சீர்கொள் கொக் கிறகும் கொன்றையும் துன்று சென்னிச் சிற்றம்பலக் கூத்த ! நீர்கொள்செஞ் சடைவாழ் மதிபுது மத்தம் நிகழ்ந்தஎன் சிந்தையுள் நிறைந்தே.

22

காமனைக் காலன் தக்கன்மிக் கெச்சென் படக்கடைக் கணித்தவன் அல்லாப் பேய்மனம் பிறிந்த தவப்பெருந் தொண்டர் தொண்டனேன் பெரும்பற்றிப் புலியூர்ச் சேமநற் றில்லை வட்டங்கொண்(டு) ஆண்ட செல்வச்சிற் றம்பலக் கூத்த ! பூமலர் அடிக்கீழ்ப் புராணபூ தங்கள் பொறுப்பர்என் புன்சொலின் பொருளே.