Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.56 திருப்பாற்றுறை

திருஞானசம்பந்தர்

1.56

திருப்பாற்றுறை பண் - பழந்தக்கராகம்

601

காரார் கொன்றை கலந்த முடியினர் சீரார் சிந்தை செலச்செய்தார் பாரார் நாளும் பரவிய பாற்றுறை ஆரா ராதி முதல்வரே.

602

நல்லா ரும்மவர் தீய ரெனப்படுஞ் சொல்லார் நன்மலர் சூடினார் பல்லார் வெண்டலைச் செல்வரெம் பாற்றுறை எல்லா ருந்தொழும் ஈசரே.

603

விண்ணார் திங்கள் விளங்கு நுதலினர் எண்ணார் வந்தென் எழில் கொண்டார் பண்ணார் வண்டினம் பாடல்செய் பாற்றுறை யுண்ணா ணாளும் உறைவரே.

604

பூவுந் திங்கள் புனைந்த முடியினர் ஏவின் அல்லா ரெயிலெய்தார் பாவந் தீர்புனல் மல்கிய பாற்றுறை ஓவென் சிந்தை யொருவரே.

605

மாகந் தோய்மதி சூடிமகிழ்ந் தென தாகம் பொன்னிற மாக்கினார் பாகம் பெண்ணும் உடையவர் பாற்றுறை நாகம் பூண்ட நயவரே.

606

போது பொன்றிகழ் கொன்றை புனைமுடி நாதர் வந்தென் நலங்கொண்டார் பாதந் தொண்டர் பரவிய பாற்றுறை வேத மோதும் விகிர்தரே.

607

வாடல் வெண்டலை சூடினர் மால்விடை கோடல் செய்த குறிப்பினார் பாடல் வண்டினம் பண்செயும் பாற்றுறை ஆடல் நாகம் அசைத்தாரே.

608

வெவ்வ மேனிய ராய்வெள்ளை நீற்றினர் எவ்வஞ் செய்தென் எழில்கொண்டார் பவ்வம் நஞ்சடை கண்டரெம் பாற்றுறை மவ்வல் சூடிய மைந்தரே.

608

ஏனம் அன்னமும் ஆனவ ருக்கெரி ஆன வண்ணத்தெம் அண்ணலார் பான லம்மலர் விம்மிய பாற்றுறை வான வெண்பிறை மைந்தரே.

610

வெந்த நீற்றினர் வேலினர் நூலினர் வந்தென் நன்னலம் வௌவினார் பைந்தண் மாதவி சூழ்தரு பாற்றுறை மைந்தர் தாமோர் மணாளரே.

611

பத்தர் மன்னிய பாற்றுறை மேவிய பத்து நூறு பெயரானைப் பத்தன் ஞானசம் பந்தன தின்றமிழ் பத்தும் பாடிப் பரவுமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - திருமூலநாதர், தேவியார் - மோகாம்பிகையம்மை.