திருநறையூர்ச்சித்தீச்சரம் பண் - தக்கேசி
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.71 திருநறையூர்ச்சித்தீச்சரம்
திருஞானசம்பந்தர்
765 பிறைகொள்சடையர் புலியினுரியர் பேழ்வாய்நாகத்தர் கறைகொள்கண்டர் கபாலமேந்துங் கையர்கங்காளர் மறைகொள்கீதம் பாடச்சேடர் மனையில்மகிழ்வெய்திச் சிறைகொள்வண்டு தேனார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
பொங்கார்சடையர் புனலர்அனலர் பூதம்பாடவே தங்காதலியுந் தாமுமுடனாய்த் தனியோர்விடையேறிக் கொங்கார்கொன்றை வன்னிமத்தஞ் சூடிக்குளிர்பொய்கைச் செங்கால்அனமும் பெடையுஞ்சேரும் சித்தீச்சரத்தாரே.
முடிகொள்சடையர் முளைவெண்மதியர் மூவாமேனிமேல் பொடிகொள்நூலர் புலியினதளர் புரிபுன்சடைதாழக் கடிகொள்சோலை வயல்சூழ்மடுவிற் கயலாரினம்பாயக் கொடிகொள்மாடக் குழாமார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
பின்றாழ்சடைமேல் நகுவெண்டலையர் பிரமன்றலையேந்தி மின்றாழுருவிற் சங்கார்குழைதான் மிளிரும்ஒருகாதர் பொன்றாழ்கொன்றை செருந்திபுன்னை பொருந்துசெண்பகஞ் சென்றார்செல்வத் திருவார்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
நீரார்முடியர் கறைகொள்கண்டர் மறைகள்நிறைநாவர் பாரார்புகழால் பத்தர்சித்தர் பாடியாடவே தேரார்வீதி முழவார்விழவின் ஒலியுந்திசைசெல்லச் சீரார்கோலம் பொலியும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
நீண்டசடையர் நிரைகொள்கொன்றை விரைகொள்மலர்மாலை தூண்டுசுடர்பொன் னொளிகொள்மேனிப் பவளத்தெழிலார்வந் தீண்டுமாடம் எழிலார்சோலை இலங்குகோபுரந் தீண்டுமதியந் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
குழலார்சடையர் கொக்கின்இறகர் கோலநிறமத்தந் தழலார்மேனித் தவளநீற்றர் சரிகோவணக்கீளர் எழிலார்நாகம் புலியினுடைமேல் இசைத்துவிடையேறிக் கழலார்சிலம்பு புலம்பவருவார் சித்தீச்சரத்தாரே.
கரையார்கடல்சூழ் இலங்கைமன்னன் கயிலைமலைதன்னை வரையார்தோளா லெடுக்கமுடிகள் நெரித்துமனமொன்றி உரையார்கீதம் பாடநல்ல வுலப்பிலருள்செய்தார் திரையார்புனல்சூழ் செல்வநறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
நெடியான்பிரமன் நேடிக்காணார் நினைப்பார்மனத்தாராய் அடியாரவரும் அருமாமறையும் அண்டத்தமரரும் முடியால்வணங்கிக் குணங்களேத்தி முதல்வாஅருளென்ன செடியார்செந்நெல் திகழும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
நின்றுண்சமணர் இருந்துண்தேரர் நீண்டபோர்வையார் ஒன்றுமுணரா ஊமர்வாயில் உரைகேட்டுழல்வீர்காள் கன்றுண்பயப்பா லுண்ணமுலையில் கபாலமயல்பொழியச் சென்றுண்டார்ந்து சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரே.
குயிலார்கோல மாதவிகள் குளிர்பூஞ்சுரபுன்னை செயிலார்பொய்கை சேரும்நறையூர்ச் சித்தீச்சரத்தாரை மயிலார்சோலை சூழ்ந்தகாழி மல்குசம்பந்தன் பயில்வார்க்கினிய பாடல்வல்லார் பாவநாசமே.