திருக்குடந்தைக்காரோணம் பண் - தக்கேசி
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.72 திருக்குடந்தைக்காரோணம்
திருஞானசம்பந்தர்
வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை நீரார்கங்கை திங்கள்சூடி நெற்றிஒற்றைக்கண் கூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன்குடமூக்கிற் காரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோணத்தாரே.
முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும்மேத்தும் படியார்பவள வாயார்பலரும் பரவிப்பணிந்தேத்தக் கொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக்குழகாருங் கடியார்சோலைக் கலவமயிலார் காரோணத்தாரே.
மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங் குலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார்குடமூக்கின் முலையாரணிபொன் முளைவெண்ணகையார் மூவாமதியினார் கலையார்மொழியார் காதல்செய்யுங் காரோணத்தாரே.
போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ்வழகாருந் தாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண்குடமூக்கின் மாதார்மங்கை பாகமாக மனைகள்பலிதேர்வார் காதார்குழையர் காளகண்டர் காரோணத்தாரே.
பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந் தேவார்சிந்தை அந்தணாளர் சீராலடிபோற்றக் கூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற்கிளிப்பிள்ளை காவார்பொழில்சூழ்ந் தழகார்குடந்தைக் காரோணத்தாரே.
மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னேஅனல்வாளி கோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர்குடமூக்கில் தீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள்நலியாமைக் காப்பார்காலன் அடையாவண்ணங் காரோணத்தாரே.
ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல்வாழ்க்கை மானார்தோலார் புலியினுடையார் கரியினுரிபோர்வை தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங்குடமூக்கிற் கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே.
வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்பமலைசேரும் விரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்துசிரம்பத்தும் உரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள்கொடுத்தாருங் கரையார்பொன்னி சூழ்தண்குடந்தைக் காரோணத்தாரே.
கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய் அரியவண்டந் தேடிப்புக்கும் அளக்கவொண்கிலார் தெரியவரிய தேவர்செல்வந் திகழுங்குடமூக்கிற் கரியகண்டர் காலகாலர் காரோணத்தாரே.
நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள் பேணார்தூய்மை மாசுகழியார் பேசேலவரோடுஞ் சேணார்மதிதோய் மாடமல்கு செல்வநெடுவீதிக் கோணாகரமொன் றுடையார்குடந்தைக் காரோணத்தாரே.
கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத் திருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ்சம்பந்தன் உருவார்செஞ்சொல் மாலையிவைபத் துரைப்பாருலகத்துக் கருவாரிடும்பைப் பிறப்பதறுத்துக் கவலைகழிவாரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சோமநாதர், தேவியார் - தேனார்மொழியம்மை.