திருப்புறவம் பண் - தக்கேசி
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.74 திருப்புறவம்
திருஞானசம்பந்தர்
நறவநிறைவண் டறைதார்க்கொன்றை நயந்துநயனத்தால் சுறவஞ்செறிவண் கொடியோனுடலம் பொடியாவிழிசெய்தான் புறவமுறைவண் பதியாமதியார் புரமூன்றெரிசெய்த இறைவனறவன் இமையோரேத்த உமையோடிருந்தானே.
உரவன்புலியின் உரிதோலாடை உடைமேல்படநாகம் விரவிவிரிபூங் கச்சாவசைத்த விகிர்தன்னுகிர்தன்னால் பொருவெங்களிறு பிளிறவுரித்துப் புறவம்பதியாக இரவும்பகலும் இமையோரேத்த உமையோடிருந்தானே.
பந்தமுடைய பூதம்பாடப் பாதஞ்சிலம்பார்க்கக் கந்தமல்கு குழலிகாணக் கரிகாட்டெரியாடி அந்தண்கடல்சூழ்ந் தழகார்புறவம் பதியாவமர்வெய்தி எந்தம்பெருமான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
நினைவார்நினைய இனியான்பனியார் மலர்தூய்நித்தலுங் கனையார்விடையொன் றுடையான்கங்கை திங்கள்கமழ்கொன்றைப் புனைவார்சடையின் முடியான்கடல்சூழ் புறவம்பதியாக எனையாளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
செங்கண்அரவும் நகுவெண்டலையும் முகிழ்வெண்திங்களுந் தங்குசடையன் விடையனுடையன் சரிகோவணஆடை பொங்குதிரைவண் கடல்சூழ்ந்தழகார் புறவம்பதியாக எங்கும்பரவி இமையோரேத்த உமையோடிருந்தானே.
பின்னுசடைகள் தாழக்கேழல் எயிறுபிறழப்போய் அன்னநடையார் மனைகள்தோறும் அழகார்பலிதேர்ந்து புன்னைமடலின் பொழில்சூழ்ந்தழகார் புறவம்பதியாக என்னையுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
உண்ணற்கரிய நஞ்சையுண் டொருதோழந்தேவர் விண்ணிற்பொலிய அமுதமளித்த விடைசேர்கொடியண்ணல் பண்ணிற்சிறைவண் டறைபூஞ்சோலைப் புறவம்பதியாக எண்ணிற்சிறந்த இமையோரேத்த உமையோடிருந்தானே.
விண்டானதிர வியனார்கயிலை வேரோடெடுத்தான்றன் திண்டோ ளுடலும் முடியுநெரியச் சிறிதேயூன்றிய புண்டானொழிய அருள்செய்பெருமான் புறவம்பதியாக எண்டோ ளுடையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காண்கில்லாப் படியாமேனி யுடையான்பவள வரைபோல்திருமார்பிற் பொடியார்கோலம் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக இடியார்முழவார் இமையோரேத்த உமையோடிருந்தானே.
ஆலும்மயிலின் பீலியமணர் அறிவில்சிறுதேரர் கோலும்மொழிகள் ஒழியக்குழுவுந் தழலுமெழில்வானும் போலும்வடிவும் உடையான்கடல்சூழ் புறவம்பதியாக ஏலும்வகையான் இமையோரேத்த உமையோடிருந்தானே.
பொன்னார்மாடம் நீடுஞ்செல்வப் புறவம்பதியாக மின்னாரிடையாள் உமையாளோடும் இருந்தவிமலனைத் தன்னார்வஞ்செய் தமிழின்விரகன் உரைத்ததமிழ்மாலை பன்னாள்பாடி யாடப்பிரியார் பரலோகந்தானே.
திருப்புறவம் என்பதும் சீகாழிக்கொருபெயர்.