Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.73 திருக்கானூர்

திருஞானசம்பந்தர்

1.73

திருக்கானூர் பண் - தக்கேசி

787

வானார்சோதி மன்னுசென்னி வன்னிபுனங்கொன்றைத் தேனார்போது தானார்கங்கை திங்களொடுசூடி மானேர்நோக்கி கண்டங்குவப்ப மாலையாடுவார் கானூர்மேய கண்ணார்நெற்றி ஆனூர் செல்வரே.

788

நீந்தலாகா வெள்ளமூழ்கு நீள்சடைதன்மேலோர் ஏய்ந்தகோணற் பிறையோடரவு கொன்றையெழிலார போந்தமென்சொல் இன்பம்பயந்த மைந்தரவர்போலாங் காந்தள்விம்மு கானூர்மேய சாந்தநீற்றாரே.

789

சிறையார்வண்டுந் தேனும்விம்மு செய்யமலர்க்கொன்றை மறையார்பாட லாடலோடு மால்விடைமேல்வருவார் இறையார்வந்தென் இல்புகுந்தென் எழில்நலமுங்கொண்டார் கறையார்சோலைக் கானூர்மேய பிறையார்சடையாரே.

790

விண்ணார்திங்கள் கண்ணிவெள்ளை மாலையதுசூடித் தண்ணாரக்கோ டாமைபூண்டு தழைபுன்சடைதாழ எண்ணாவந்தென் இல்புகுந்தங் கெவ்வநோய்செய்தான் கண்ணார்சோலைக் கானூர்மேய விண்ணோர்பெருமானே.

791

தார்கொள்கொன்றைக் கண்ணியோடுந் தண்மதியஞ்சூடி சீர்கொள்பாட லாடலோடு சேடராய்வந்து ஊர்கள்தோறும் ஐயம்ஏற்றென் னுள்வெந்நோய்செய்தார் கார்கொள்சோலைக் கானூர்மேய கறைக்கண்டத்தாரே.

792

முளிவெள்ளெலும்பு நீறுநூலும் மூழ்குமார்பராய் எளிவந்தார்போல் ஐயமென்றென் இல்லேபுகுந்துள்ளத் தெளிவுநாணுங் கொண்டகள்வர் தேறலார்பூவில் களிவண்டியாழ்செய் கானூர்மேய ஒளிவெண்பிறையாரே.

793

மூவாவண்ணர் முளைவெண்பிறையர் முறுவல்செய்திங்கே பூவார்கொன்றை புனைந்துவந்தார் பொக்கம்பலபேசிப் போவார்போல மால்செய்துள்ளம் புக்கபுரிநூலர் தேவார்சோலைக் கானூர்மேய தேவதேவரே.

794

தமிழின்நீர்மை பேசித்தாளம் வீணைபண்ணிநல்ல முழவம்மொந்தை மல்குபாடல் செய்கையிடமோவார் குமிழின்மேனி தந்துகோல நீர்மையதுகொண்டார் கமழுஞ்சோலைக் கானூர்மேய பவளவண்ணரே.

795

அந்தமாதி அயனுமாலும் ஆர்க்குமறிவரியான் சிந்தையுள்ளும் நாவின்மேலுஞ் சென்னியுமன்னினான் வந்தென்னுள்ளம் புகுந்துமாலை காலையாடுவான் கந்தமல்கு கானூர்மேய எந்தைபெம்மானே.

796

ஆமையரவோ டேனவெண்கொம் பக்குமாலைபூண் டாமோர்கள்வர் வெள்ளர்போல உள்வெந்நோய்செய்தார் ஓமவேத நான்முகனுங் கோணாகணையானுஞ் சேமமாய செல்வர்கானூர் மேயசேடரே.

797

கழுதுதுஞ்சுங் கங்குலாடுங் கானூர்மேயானைப் பழுதில்ஞான சம்பந்தன்சொல் பத்தும்பாடியே தொழுதுபொழுது தோத்திரங்கள் சொல்லித்துதித்துநின் றழுதுநக்கும் அன்புசெய்வார் அல்லலறுப்பாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - செம்மேனிநாயகர், தேவியார் - சிவயோகநாயகியம்மை.