Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.114 திருக்கேதாரம்

திருஞானசம்பந்தர்

2.114

திருக்கேதாரம் பண் - செவ்வழி

1234

தொண்டரஞ்சுங் களிறு மடக்கிச் சுரும்பார்மலர் இண்டைகட்டி வழிபாடு செய்யுமிட மென்பரால் வண்டுபாட மயிலால மான்கன்று துள்ளவரிக் கெண்டைபாயச் சுனைநீல மொட்டலருங் கேதாரமே.

1235

பாதம்விண் ணோர்பலரும் பரவிப்பணிந் தேத்தவே வேதநான்கும் பதினெட்டொ டாறும்விரித் தார்க்கிடந் தாதுவிண்ட மதுவுண்டு மிண்டிவரு வண்டினங் கீதம்பாட மடமந்தி கேட்டுகளுங் கேதாரமே.

1236

முந்திவந்து புரோதாய மூழ்கிம் முனிகள்பலர் எந்தைபெம்மா னெனநின் றிறைஞ்சுமிட மென்பரால் மந்திபாயச் சரேலச் சொரிந்தும் முரிந்துக்கபூக் கெந்தநாறக் கிளருஞ் சடையெந்தை கேதாரமே.

1237

உள்ளமிக்கார் குதிரைம் முகத்தாரொரு காலர்கள் எள்கலில்லா இமையோர்கள் சேரும்மிட மென்பரால் பிள்ளைதுள்ளிக் கிளைபயில்வ கேட்டுப்பிரி யாதுபோய்க் கிள்ளையேனற் கதிர்கொணர்ந்து வாய்ப்பெய்யுங் கேதாரமே.

1238

ஊழியூழி யுணர்வார்கள் வேதத்தினொண் பொருள்களால் வாழியெந்தை யெனவந்தி றைஞ்சும்மிட மென்பரால் மேழிதாங்கி யுழுவார்கள் போலவ்விரை தேரிய கேழல்பூழ்தி கிளைக்க மணிசிந்துங் கேதாரமே.

1239

நீறுபூசி நிலத்துண்டு நீர்மூழ்கிநீள் வரைதன்மேல் தேறுசிந்தை யுடையார்கள் சேரும்மிட மென்பரால் ஏறிமாவின் கனியும்பலா வின்னிருஞ் சுளைகளுங் கீறிநாளும் முசுக்கிளையோ டுண்டுகளுங் கேதாரமே.

1240

மடந்தைபாகத் தடக்கிம் மறையோதி வானோர்தொழத் தொடர்ந்தநம்மேல் வினைதீர்க்க நின்றார்க்கிட மென்பரால் உடைந்தகாற்றுக் குயர்வேங்கை பூத்துதிரக் கல்லறைகண்மேல் கிடந்தவேங்கை சினமா முகஞ்செய்யுங் கேதாரமே.

1241

அரவமுந்நீர் அணியிலங்கைக் கோனையரு வரைதனால் வெருவவூன்றி விரலாலடர்த் தார்க்கிட மென்பரால் குரவங்கோங்கங் குளிர்பிண்டி ஞாழல்சுர புன்னைமேல் கிரமமாக வரிவண்டு பண்செய்யுங் கேதாரமே.

1242

ஆழ்ந்துகாணார் உயர்ந்தெய்த கில்லாரல மந்தவர் தாழ்ந்துதந்தம் முடிசாய நின்றார்க்கிட மென்பரால் வீழ்ந்துசெற்றுந் நிழற்கிறங்கும் வேழத்தின்வெண் மருப்பினைக் கீழ்ந்துசிங்கங் குருகுண்ண முத்துதிருங் கேதாரமே.

1243

கடுக்கள்தின்று கழிமீன்கவர் வார்கள் மாசுடம்பினர் இடுக்கணுய்ப்பா ரவரெய்த வொண்ணாவிட மென்பரால் அடுக்கநின்றவ் வறவுரைகள் கேட்டாங்கவர் வினைகளைக் கெடுக்கநின்ற பெருமான் உறைகின்ற கேதாரமே.

1244

வாய்ந்தசெந்நெல் விளைகழனி மல்கும்வயற் காழியான் ஏய்ந்தநீர்க்கோட் டிமையோர் உறைகின்ற கேதாரத்தை ஆய்ந்துசொன்ன அருந்தமிழ்கள் பத்தும்மிசை வல்லவர் வேந்தராகி யுலகாண்டு வீடு கதிபெறுவரே.

இத்தலம் வடதேசத்திலுள்ளது. சுவாமிபெயர் - கேதாரேசுவரர், தேவியார் - கௌரியம்மை.