Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.115 திருப்புகலூர்

திருஞானசம்பந்தர்

2.115

திருப்புகலூர் பண் - செவ்வழி

1245

வெங்கள்விம்மு குழலிளைய ராடவ்வெறி விரவுநீர்ப் பொங்குசெங்கட் கருங்கயல்கள் பாயும்புக லூர்தனுள் திங்கள்சூடித் திரிபுரமோ ரம்பாலெரி யூட்டிய எங்கள்பெம்மான் அடிபரவ நாளும்மிடர் கழியுமே.

1246

வாழ்ந்தநாளும் மினிவாழு நாளும்மிவை யறிதிரேல் வீழ்ந்தநாளெம் பெருமானை யேத்தாவிதி யில்லிகாள் போழ்ந்ததிங்கட் புரிசடையி னான்றன்புக லூரையே சூழ்ந்தவுள்ளம் உடையீர்காள் உங்கள்துயர் தீருமே.

1247

மடையின்நெய்தல் கருங்குவளை செய்யம்மலர்த் தாமரை புடைகொள்செந்நெல் விளைகழனி மல்கும்புக லூர்தனுள் தொடைகொள்கொன்றை புனைந்தானோர் பாகம்மதி சூடியை அடையவல்லார் அமருலகம் ஆளப் பெறுவார்களே.

1248

பூவுந்நீரும் பலியுஞ் சுமந்துபுக லூரையே நாவினாலே நவின்றேத்த லோவார்செவித் துளைகளால் யாவுங்கேளார் அவன்பெருமை யல்லால்அடி யார்கள்தாம் ஓவுநாளும் உணர்வொழிந்த நாளென்றுள்ளங் கொள்ளவே.

1249

அன்னங்கன்னிப் பெடைபுல்கி யொல்கியணி நடையவாய்ப் பொன்னங்காஞ்சி மலர்ச்சின்ன மாலும்புக லூர்தனுள் முன்னம்மூன்று மதிலெரித்த மூர்த்திதிறங் கருதுங்கால் இன்னரென்னப் பெரிதரியர் ஏத்தச்சிறி தெளியரே.

1250

குலவராகக் குலம்இலரு மாகக்குணம் புகழுங்கால் உலகில்நல்ல கதிபெறுவ ரேனும்மல ரூறுதேன் புலவமெல்லாம் வெறிகமழும் அந்தண்புக ளுர்தனுள் நிலவமல்கு சடையடிகள் பாதம்நினை வார்களே.

1251

ஆணும்பெண்ணும் மெனநிற்ப ரேனும்மர வாரமாப் பூணுமேனும் புகலூர் தனக்கோர் பொருளாயினான் ஊணும்ஊரார் இடுபிச்சை யேற்றுண்டுடை கோவணம் பேணுமேனும் பிரானென்ப ராலெம்பெரு மானையே.

1252

உய்யவேண்டில் எழுபோத நெஞ்சேயுய ரிலங்கைக்கோன் கைகளொல்கக் கருவரை யெடுத்தானையோர் விரலினால் செய்கைதோன்றச் சிதைத்தருள வல்லசிவன் மேயபூம் பொய்கைசூழ்ந்த புகலூர் புகழப் பொருளாகுமே.

1253

நேமியானும் முகநான் குடையந்நெறி யண்ணலும் ஆமிதென்று தகைந்தேத்தப் போயாரழ லாயினான் சாமிதாதை சரணாகு மென்றுதலை சாய்மினோ பூமியெல்லாம் புகழ்செல்வம் மல்கும்புக லூரையே.

1254

வேர்த்தமெய்யர் உருவத் துடைவிட் டுழல்வார்களும் போர்த்தகூறைப் போதிநீழ லாரும்புக லூர்தனுள் தீர்த்தமெல்லாஞ் சடைக்கரந்த தேவன்திறங் கருதுங்கால் ஓர்த்துமெய்யென் றுணராது பாதந்தொழு துய்ம்மினே.

1255

புந்தியார்ந்த பெரியோர்கள் ஏத்தும்புக லூர்தனுள் வெந்தசாம்பற் பொடிப்பூச வல்லவிடை யூர்தியை அந்தமில்லா அனலாட லானையணி ஞானசம் பந்தன்சொன்ன தமிழ்பாடி யாடக்கெடும் பாவமே.