Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.26 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.26

திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

259

நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதி மூர்த்தி பங்கனே பரம யோகி என்றென்றே பரவி நாளுஞ் செம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதங் காண்பான் அன்பனே அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னாரே.

260

பொய்யினால் மிடைந்த போர்வை புரைபுரை அழுகி வீழ மெய்யனாய் வாழ மாட்டேன் வேண்டிற்றொன் றைவர் வேண்டார் செய்யதா மரைகள் அன்ன சேவடி இரண்டுங் காண்பான் ஐயநான் அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னாரே.

261

நீதியால் வாழ மாட்டேன் நித்தலுந் தூயே னல்லேன் ஓதியும் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன் சோதியே சுடரே உன்றன் தூமலர்ப் பாதங் காண்பான் ஆதியே அலந்து போனேன் அதிகைவீ ரட்ட னாரே.

262

தெருளுமா தெருள மாட்டேன் தீவினைச் சுற்ற மென்னும் பொருளுளே அழுந்தி நாளும் போவதோர் நெறியுங் காணேன் இருளுமா மணிகண் டாநின் இணையடி இரண்டுங் காண்பான் அருளுமா றருள வேண்டும் அதிகைவீ ரட்ட னாரே.

263

அஞ்சினால் இயற்றப் பட்ட ஆக்கைபெற் றதனுள் வாழும் அஞ்சினால் அடர்க்கப் பட்டிங் குழிதரும் ஆத னேனை அஞ்சினால் உய்க்கும் வண்ணங் காட்டினாய்க் கச்சந் தீர்ந்தேன் அஞ்சினால் பொலிந்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.

264

உறுகயி றூசல் போல ஒன்றுவிட் டொன்று பற்றி மறுகயி றூசல் போல வந்துவந் துலவு நெஞ்சம் பெறுகயி றூசல் போலப் பிறைபுல்கு சடையாய் பாதத் தறுகயி றூச லானேன் அதிகைவீ ரட்ட னாரே.

265

கழித்திலேன் காம வெந்நோய் காதன்மை என்னும் பாசம் ஒழித்திலேன் ஊன்கண் நோக்கி உணர்வெனும் இமைதி றந்து விழித்திலேன் வெளிறு தோன்ற வினையெனுஞ் சரக்குக் கொண்டேன் அழித்திலேன் அயர்த்துப் போனேன் அதிகைவீ ரட்ட னாரே.

266

மன்றத்துப் புன்னை போல மரம்படு துயர மெய்தி ஒன்றினால் உணர மாட்டேன் உன்னையுள் வைக்க மாட்டேன் கன்றிய காலன் வந்து கருக்குழி விழுப்ப தற்கே அன்றினான் அலமந் திட்டேன் அதிகைவீ ரட்ட னாரே.

267

பிணிவிடா ஆக்கை பெற்றேன் பெற்றமொன் றேறு வானே பணிவிடா இடும்பை யென்னும் பாசனத் தழுந்து கின்றேன் துணிவிலேன் தூய னல்லேன் தூமலர்ப் பாதங் காண்பான் அணியனாய் அறிய மாட்டேன் அதிகைவீ ரட்ட னாரே.

268

திருவினாள் கொழுந னாருந் திசைமுக முடைய கோவும் இருவரும் எழுந்தும் வீழ்ந்தும் இணையடி காண மாட்டா ஒருவனே எம்பி ரானே உன்திருப் பாதங் கண்பான் அருவனே அருள வேண்டும் அதிகைவீ ரட்ட னாரே.