Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.27 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.27

திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

269

மடக்கினார் புலியின் தோலை மாமணி நாகங் கச்சா முடக்கினார் முகிழ்வெண் டிங்கள் மொய்சடைக் கற்றை தன்மேல் தொடக்கினார் தொண்டைச் செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குல் அடக்கினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.

270

சூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங் கூடினாள் நங்கை யாளும் ஊடலை ஒழிக்க வேண்டிப் பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே ஆடினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.

271

கொம்பினார் குழைத்த வேனற் கோமகன் கோல நீர்மை நம்பினார் காண லாகா வகையதோர் நடலை செய்தார் வெம்பினார் மதில்கள் மூன்றும் வில்லிடை எரித்து வீழ்த்த அம்பினார் கெடில வேலி அதிகைவீ ரட்ட னாரே.

272

மறிபடக் கிடந்த கையர் வளரிள மங்கை பாகஞ் செறிபடக் கிடந்த செக்கர்ச் செழுமதிக் கொழுந்து சூடி பொறிபடக் கிடந்த நாகம் புகையுமிழ்ந் தழல வீக்கிக் கிறிபட நடப்பர் போலுங் கெடிலவீ ரட்ட னாரே.

273

நரிவரால் கவ்வச் சென்று நற்றசை இழந்த தொத்த தெரிவரால் மால்கொள் சிந்தை தீர்ப்பதோர் சிந்தை செய்வார் வரிவரால் உகளுந் தெண்ணீணர்க் கழனிசூழ் பழன வேலி அரிவரால் வயல்கள் சூழ்ந்த அதிகைவீ ரட்ட னாரே.

274

புள்ளலைத் துண்ட ஓட்டில் உண்டுபோய் பலாசங் கொம்பின் சுள்ளலைச் சுடலை வெண்ணீ றணிந்தவர் மணிவெள் ளேற்றுத் துள்ளலைப் பாகன் றன்னைத் தொடர்ந்திங்கே கிடக்கின் றேனை அள்ளலைக் கடப்பித் தாளும் அதிகைவீ ரட்ட னாரே.

275

நீறிட்ட நுதலர் வேலை நீலஞ்சேர் கண்டர் மாதர் கூறிட்ட மெய்ய ராகிக் கூறினார் ஆறும் நான்குங் கீறிட்ட திங்கள் சூடிக் கிளர்தரு சடையி னுள்ளால் ஆறிட்டு முடிப்பர் போலும் அதிகைவீ ரட்ட னாரே.

276

காணிலார் கருத்தில் வாரார் திருத்தலார் பொருத்த லாகார் ஏணிலார் இறப்பும் இல்லார் பிறப்பிலார் துறக்க லாகார் நாணிலார் ஐவ ரோடும் இட்டெனை விரவி வைத்தார் ஆணலார் பெண்ணும் அல்லார் அதிகைவீ ரட்ட னாரே. (*) இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

277

தீர்த்தமா மலையை நோக்கிச் செருவலி அரக்கன் சென்று பேர்த்தலும் பேதை அஞ்சப் பெருவிர லதனை யூன்றிச் சீர்த்தமா முடிகள் பத்துஞ் சிதறுவித் தவனை யன்று ஆர்த்தவாய் அலற வைத்தார் அதிகைவீ ரட்ட னாரே.