Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.30 திருக்கழிப்பாலை - திரு நேரிசை

திருநாவுக்கரசர்

4.30

திருக்கழிப்பாலை - திரு நேரிசை

294

நங்கையைப் பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார் அங்கையில் அனலும் வைத்தார் ஆனையின் உரிவை வைத்தார் தங்கையின் யாழும் வைத்தார் தாமரை மலரும் வைத்தார் கங்கையைச் சடையுள் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

295

விண்ணினை விரும்ப வைத்தார் வேள்வியை வேட்க வைத்தார் பண்ணினைப் பாட வைத்தார் பத்தர்கள் பயில வைத்தார் மண்ணினைத் தாவ நீண்ட மாலினுக் கருளும் வைத்தார் கண்ணினை நெற்றி வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

296

வாமனை வணங்க வைத்தார் வாயினை வாழ்த்த வைத்தார் சோமனைச் சடைமேல் வைத்தார் சோதியுட் சோதி வைத்தார் ஆமனை யாட வைத்தார் அன்பெனும் பாசம் வைத்தார் காமனைக் காய்ந்த கண்ணார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

297

அரியன அங்கம் வேதம் அந்தணர்க் கருளும் வைத்தார் பெரியன புரங்கள் மூன்றும் பேரழ லுண்ண வைத்தார் பரியதீ வண்ண ராகிப் பவளம்போல் நிறத்தை வைத்தார் கரியதோர் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

298

கூரிருள் கிழிய நின்ற கொடுமழுக் கையில் வைத்தார் பேரிருள் கழிய மல்கு பிறைபுனற் சடையுள் வைத்தார் ஆரிருள் அண்டம் வைத்தார் அறுவகைச் சமயம் வைத்தார் காரிருள் கண்டம் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

299

உட்டங்கு சிந்தை வைத்தார் உள்குவார்க் குள்ளம் வைத்தார் விட்டங்கு வேள்வி வைத்தார் வெந்துயர் தீர வைத்தார் நட்டங்கு நடமும் வைத்தார் ஞானமு நவில வைத்தார் கட்டங்கந் தோண்மேல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

300

ஊனப்பே ரொழிய வைத்தார் ஓதியே உணர வைத்தார் ஞானப்பேர் நவில வைத்தார் ஞானமு நடுவும் வைத்தார் வானப்பே ராறும் வைத்தார் வைகுந்தற் காழி வைத்தார் கானப்பேர் காதல் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே

301

கொங்கினும் அரும்பு வைத்தார் கூற்றங்கள் கெடுக்க வைத்தார் சங்கினுள் முத்தம் வைத்தார் சாம்பலும் பூச வைத்தார் அங்கமும் வேதம் வைத்தார் ஆலமும் உண்டு வைத்தார் கங்குலும் பகலும் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

302

சதுர்முகன் தானும் மாலுந் தம்மிலே இகலக் கண்டு எதிர்முக மின்றி நின்ற எரியுரு வதனை வைத்தார் பிதிர்முகன் காலன் றன்னைக் கால்தனிற் பிதிர வைத்தார் கதிர்முகஞ் சடையில் வைத்தார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

303

மாலினாள் நங்கை அஞ்ச மதிலிலங் கைக்கு மன்னன் வேலினான் வெகுண் டெடுக்கக் காண்டலும் வேத நாவன் நூலினான் நோக்கி நக்கு நொடிப்பதோ ரளவில் வீழக் காலினால் ஊன்றி யிட்டார் கழிப்பாலைச் சேர்ப்ப னாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பால்வண்ணவீசுவரர், தேவியார் - பொற்பதவேதநாயகி.