திருவீழிமிழலை - திருவிருத்தம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.96 திருவீழிமிழலை - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
வான்சொட்டச் சொட்டநின் றட்டும் வளர்மதி யோடயலே தேன்சொட்டச் சொட்டநின் றட்டுந் திருக்கொன்றை சென்னிவைத்தீர் மான்பெட்டை நோக்கி மணாளீர் மணிநீர் மிழலையுள்ளீர் நான்சட்ட வும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
அந்தமும் ஆதியு மாகிநின் றீரண்டம் எண்டிசையும் பந்தமும் வீடும் பரப்புகின் றீர்பசு வேற்றுகந்தீர் வெந்தழல் ஓம்பு மிழலையுள் ளீரென்னைத் தென்றிசைக்கே உந்திடும் போது மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
அலைக்கின்ற நீர்நிலங் காற்றனல் அம்பர மாகிநின்றீர் கலைக்கன்று சேருங் கரத்தீர் கலைப்பொரு ளாகிநின்றீர் விலக்கின்றி நல்கும் மிழலையுள் ளீர்மெய்யிற் கையொடுகால் குலைக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
தீத்தொழி லான்றலை தீயிலிட் டுச்செய்த வேள்விசெற்றீர் பேய்த்தொழி லாட்டியைப் பெற்றுடை யீர்பிடித் துத்திரியும் வேய்த்தொழி லாளர் மிழலையுள் ளீர்விக்கி அஞ்செழுத்தும் ஓத்தொழிந் தும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
தோட்பட்ட நாகமுஞ் சூலமுஞ் சுத்தியும் பத்திமையான் மேற்பட்ட அந்தணர் வீழியும் என்னையும் வேறுடையீர் நாட்பட்டு வந்து பிறந்தேன் இறக்க நமன்தமர்தம் கோட்பட்டு நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
கண்டியிற் பட்ட கழுத்துடை யீர்கரி காட்டிலிட்ட பண்டியிற் பட்ட பரிகலத் தீர்பதி வீழிகொண்டீர் உண்டியிற் பட்டினி நோயில் உறக்கத்தில் உம்மையைவர் கொண்டியிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
தோற்றங்கண் டான்சிர மொன்றுகொண் டீர்தூய வெள்ளெருதொன் றேற்றங்கொண் டீரெழில் வீழி மிழலை இருக்கைகொண்டீர் சீற்றங்கொண் டென்மேல் சிவந்ததோர் பாசத்தால் வீசியவெங் கூற்றங்கண் டும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
சுழிப்பட்ட கங்கையுந் திங்களுஞ் சூடிச்சொக் கம்பயின்றீர் பழிப்பட்ட பாம்பரைப் பற்றுடை யீர்படர் தீப்பருக விழிப்பட்ட காமனை வீட்டீர் மிழலையுள் ளீர்பிறவிச் சுழிப்பட்டு நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
பிள்ளையிற் பட்ட பிறைமுடி யீர்மறை யோதவல்லீர் வெள்ளையிற் பட்டதோர் நீற்றீர் விரிநீர் மிழலையுள்ளீர் நள்ளையிற் பட்டைவர் நக்கரைப் பிக்க நமன்தமர்தங் கொள்ளையிற் பட்டு மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
கறுக்கொண் டரக்கன் கயிலையைப் பற்றிய கையுமெய்யும் நெறுக்கென் றிறச்செற்ற சேவடி யாற்கூற்றை நீறுசெய்தீர் வெறிக்கொன்றை மாலை முடியீர் விரிநீர் மிழலையுள்ளீர் இறக்கின்று நும்மை மறக்கினும் என்னைக் குறிக்கொண்மினே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீழியழகர், தேவியார் - சுந்தரகுஜாம்பிகையம்மை.