திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.29 திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
நிறைக்க வாலியள் அல்லளிந் நேரிழை மறைக்க வாலியள் அல்லளிம் மாதராள் பிறைக்க வாலிப் பெரும்புனல் ஆவடு துறைக்க வாலியோ டாடிய சுண்ணமே.
தவள மாமதிச் சாயலோர் சந்திரன் பிளவு சூடிய பிஞ்ஞகன் எம்மிறை அளவு கண்டிலள் ஆவடு தண்டுறைக் களவு கண்டனள் ஒத்தனள் கன்னியே.
பாதி பெண்ணொரு பாகத்தன் பன்மறை ஓதி யென்னுளங் கொண்டவன் ஒண்பொருள் ஆதி ஆவடு தண்டுறை மேவிய சோதி யேசுட ரேயென்று சொல்லுமே.
கார்க்கொள் மாமுகில் போல்வதோர் கண்டத்தன் வார்க்கொள் மென்முலை சேர்ந்திறு மாந்திவள் ஆர்க்கொள் கொன்றையன் ஆவடு தண்டுறைத் தார்க்கு நின்றிவள் தாழுமா காண்மினே.
கருகு கண்டத்தன் காய்கதிர்ச் சோதியன் பருகு பாலமு தேயென்னும் பண்பினன் அருகு சென்றிலள் ஆவடு தண்டுறை ஒருவன் என்னை யுடையகோ வென்னுமே.
குழலுங் கொன்றையுங் கூவிள மத்தமுந் தழலுந் தையலோர் பாகமாத் தாங்கினான் அழகன் ஆவடு தண்டுறை யாவெனக் கழலுங் கைவளை காரிகை யாளுக்கே.
பஞ்சின் மெல்லடிப் பாவையோர் பங்கனைத் தஞ்ச மென்றிறு மாந்திவ ளாரையும் அஞ்சு வாளல்லள் ஆவடு தண்டுறை மஞ்ச னோடிவள் ஆடிய மையலே.
பிறையுஞ் சூடிநற் பெண்ணொடா ணாகிய நிறையு நெஞ்சமும் நீர்மையுங் கொண்டவன் அறையும் பூம்பொழில் ஆவடு தண்டுறை இறைவன் என்னை யுடையவன் என்னுமே.
வையந் தானளந் தானும் அயனுமாய் மெய்யைக் காணலுற் றார்க்கழ லாயினான் ஐயன் ஆவடு தண்டுறை யாவெனக் கையில் வெள்வளை யுங்கழல் கின்றதே.
பக்கம் பூதங்கள் பாடப் பலிகொள்வான் மிக்க வாளரக் கன்வலி வீட்டினான் அக்க ணிந்தவன் ஆவடு தண்டுறை நக்கன் என்னுமிந் நாணிலி காண்மினே.