திருவையாறு - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.28 திருவையாறு - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
சிந்தை வண்ணத்த ராய்த்திறம் பாவணம் முந்தி வண்ணத்த ராய்முழு நீறணி சந்தி வண்ணத்த ராய்த்தழல் போல்வதோர் அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே.
மூல வண்ணத்த ராய்முத லாகிய கோல வண்ணத்த ராகிக் கொழுஞ்சுடர் நீல வண்ணத்த ராகி நெடும்பளிங் கால வண்ணத்த ராவர்ஐ யாறரே.
சிந்தை வண்ணமுந் தீயதோர் வண்ணமும் அந்திப் போதழ காகிய வண்ணமும் பந்திக் காலனைப் பாய்ந்ததோர் வண்ணமும் அந்தி வண்ணமு மாவர்ஐ யாறரே.
இருளின் வண்ணமு மேழிசை வண்ணமுஞ் சுருளின் வண்ணமுஞ் சோதியின் வண்ணமும் மருளு நான்முகன் மாலொடு வண்ணமும் அருளும் வண்ணமு மாவர்ஐ யாறரே.
இழுக்கின் வண்ணங்க ளாகிய வெவ்வழல் குழைக்கும் வண்ணங்க ளாகியுங் கூடியும் மழைக்கண் மாமுகி லாகிய வண்ணமும் அழைக்கும் வண்ணமு மாவர்ஐ யாறரே.
இண்டை வண்ணமும் ஏழிசை வண்ணமுந் தொண்டர் வண்ணமுஞ் சோதியின் வண்ணமுங் கண்ட வண்ணங்க ளாய்க்கனல் மாமணி அண்ட வண்ணமு மாவர்ஐ யாறரே.
விரும்பும் வண்ணமும் வேதத்தின் வண்ணமுங் கரும்பின் இன்மொழிக் காரிகை வண்ணமும் விரும்பு வார்வினை தீர்த்திடும் வண்ணமும் அரும்பின் வண்ணமு மாவர்ஐ யாறரே.
ஊழி வண்ணமும் ஒண்சுடர் வண்ணமும் வேழ ஈருரி போர்த்ததோர் வண்ணமும் வாழித் தீயுரு வாகிய வண்ணமும் ஆழி வண்ணமு மாவர்ஐ யாறரே.
செய்த வன்றிரு நீறணி வண்ணமும் எய்த நோக்கரி தாகிய வண்ணமுங் கைது காட்சி யரியதோர் வண்ணமும் ஐது வண்ணமு மாவர்ஐ யாறரே.
எடுத்த வாளரக் கன்றிறல் வண்ணமும் இடர்க்கள் போல்பெரி தாகிய வண்ணமுங் கடுத்த கைந்நரம் பாலிசை வண்ணமும் அடுத்த வண்ணமு மாவர்ஐ யாறரே.