Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.53 திருவதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.53

திருவதிகைவீரட்டம் - திருக்குறுந்தொகை

531

கோணன் மாமதி சூடியோர் கோவணம் நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை பாணில் வீணை பயின்றவன் வீரட்டங் காணில் அல்லதென் கண்டுயில் கொள்ளுமே.

532

பண்ணி னைப்பவ ளத்திரள் மாமணி அண்ண லையம ரர்தொழு மாதியைச் சுண்ண வெண்பொடி யான்றிரு வீரட்டம் நண்ணி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.

533

உற்ற வர்தம் உறுநோய் களைபவர் பெற்ற மேறும் பிறங்கு சடையினர் சுற்றும் பாய்புனல் சூழ்திரு வீரட்டங் கற்கி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.

534

முற்றா வெண்மதி சூடும் முதல்வனார் செற்றார் வாழுந் திரிபுரந் தீயெழ விற்றான் கொண்டெயி லெய்தவர் வீரட்டங் கற்றா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.

535

பல்லா ரும்பல தேவர் பணிபவர் நல்லா ருந்நயந் தேத்தப் படுபவன் வில்லால் மூவெயி லெய்தவன் வீரட்டங் கல்லே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.

536

வண்டார் கொன்றையும் மத்தம் வளர்சடைக் கொண்டான் கோல மதியோ டரவமும் விண்டார் மும்மதி லெய்தவன் வீரட்டங் கண்டா லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.

537

அரையார் கோவண ஆடைய னாறெலாந் திரையார் ஒண்புனல் பாய்கெடி லக்கரை விரையார் நீற்றன் விளங்கு வீரட்டன்பாற் கரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.

538

நீறு டைத்தடந் தோளுடை நின்மலன் ஆறு டைப்புனல் பாய்கெடி லக்கரை ஏறு டைக்கொடி யான்றிரு வீரட்டங் கூறி லல்லதென் கண்டுயில் கொள்ளுமே.

539

செங்கண் மால்விடை யேறிய செல்வனார் பைங்க ணானையின் ஈருரி போர்த்தவர் அங்கண் ஞாலம தாகிய வீரட்டங் கங்கு லாகவென் கண்டுயில் கொள்ளுமே.

540

பூணா ணாரம் பொருந்த வுடையவர் நாணா கவ்வரை வில்லிடை யம்பினாற் பேணார் மும்மதி லெய்தவன் வீரட்டங் காணே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.

541

வரையார்ந் தவயி ரத்திரள் மாணிக்கந் திரையார்ந் தபுனல் பாய்கெடி லக்கரை விரையார் நீற்றன் விளங்கிய வீரட்டம் உரையே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.

542

உலந்தார் வெண்டலை உண்கல னாகவே வலந்தான் மிக்கவன் வாளரக் கன்றனைச் சிலம்பார் சேவடி யூன்றினான் வீரட்டம் புலம்பே னாகிலென் கண்டுயில் கொள்ளுமே.

இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர், தேவியார் - திருவதிகைநாயகியம்மை.