Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.59 திருமாற்பேறு - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.59

திருமாற்பேறு - திருக்குறுந்தொகை

593

பொருமாற் றின்படை வேண்டிநற் பூம்புனல் வருமாற் றின்மலர் கொண்டு வழிபடுங் கருமாற் கின்னருள் செய்தவன் காண்டகு திருமாற் பேறு தொழவினை தேயுமே.

594

ஆலத் தார்நிழ லில்லறம் நால்வர்க்குக் கோலத் தாலுரை செய்தவன் குற்றமில் மாலுக் காரருள் செய்தவன் மாற்பேறு ஏலத் தான்றொழு வார்க்கிட ரில்லையே.

595

துணிவண் ணச்சுட ராழிகொள் வானெண்ணி அணிவண் ணத்தலர் கொண்டடி யர்ச்சித்த மணிவண் ணற்கருள் செய்தவன் மாற்பேறு பணிவண் ணத்தவர்க் கில்லையாம் பாவமே.

596

தீத வைசெய்து தீவினை வீழாதே காதல் செய்து கருத்தினில் நின்றநன் மாத வர்பயில் மாற்பேறு கைதொழப் போது மின்வினை யாயின போகுமே.

597

வார்கொள் மென்முலை மங்கையோர் பங்கினன் வார்கொள் நன்முர சம்மறை யவ்வறை வார்கொள் பைம்பொழில் மாற்பேறு கைதொழு வார்கள் மன்னுவர் பொன்னுல கத்திலே.

598

பண்டை வல்வினை பற்றறுக் கும்வகை உண்டு சொல்லுவன் கேண்மின் ஒளிகிளர் வண்டு சேர்பொழில் சூழ்திரு மாற்பேறு கண்டு கைதொழத் தீருங் கவலையே.

599

மழுவ லான்றிரு நாமம் மகிழ்ந்துரைத் தழவ லார்களுக் கன்புசெய் தின்பொடும் வழுவி லாவருள் செய்தவன் மாற்பேறு தொழவ லார்தமக் கில்லை துயரமே.

600

முன்ன வனுல குக்கு முழுமணிப் பொன்ன வன்றிகழ் முத்தொடு போகமாம் மன்ன வன்றிரு மாற்பேறு கைதொழும் அன்ன வரெமை யாளுடை யார்களே.

601

வேட னாய்விச யன்னொடும் எய்துவெங் காடு நீடுகந் தாடிய கண்ணுதல் மாட நீடுய ருந்திரு மாற்பேறு பாடு வார்பெறு வார்பர லோகமே.

602

கருத்த னாய்க்கயி லாய மலைதனைத் தருக்கி னாலெடுத் தானைத் தகரவே வருத்தி யாரருள் செய்தவன் மாற்பேறு அருத்தி யாற்றொழு வார்க்கில்லை அல்லலே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.