திருமாற்பேறு - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.60 திருமாற்பேறு - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
ஏது மொன்று மறிவில ராயினும் ஓதி அஞ்செழுத் தும்முணர் வார்கட்குப் பேத மின்றி அவரவர் உள்ளத்தே மாதுந் தாமும் மகிழ்வர்மாற் பேறரே.
அச்ச மில்லைநெஞ் சேயரன் நாமங்கள் நிச்ச லுந்நினை யாய்வினை போயறக் கச்ச மாவிட முண்டகண் டாவென வைச்ச மாநிதி யாவர் மாற்பேறரே.
சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே.
இருந்து சொல்லுவன் கேண்மின்கள் ஏழைகாள் அருந்த வந்தரும் அஞ்செழுத் தோதினாற் பொருந்து நோய்பிணி போகத் துரப்பதோர் மருந்து மாகுவர் மன்னுமாற் பேறரே.
சாற்றிச் சொல்லுவன் கேண்மின் தரணியீர் ஏற்றின் மேல்வரு வான்கழ லேத்தினாற் கூற்றை நீக்கிக் குறைவறுத் தாள்வதோர் மாற்றி லாச்செம்பொ னாவர்மாற் பேறரே.
ஈட்டு மாநிதி சால இழக்கினும் வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங் காட்டில் மாநட மாடுவாய் காவெனில் வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற் பேறரே.
ஐய னேயர னேயென் றரற்றினால் உய்ய லாமுல கத்தவர் பேணுவர் செய்ய பாத மிரண்டும் நினையவே வைய மாளவும் வைப்பர்மாற் பேறரே. (*) இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
உந்திச் சென்று மலையை யெடுத்தவன் சந்து தோளொடு தாளிற வூன்றினான் மந்தி பாய்பொழில் சூழுமாற் பேறென அந்த மில்லதோர் இன்பம் அணுகுமே.