திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.62 திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும் அருத்த னையடி யேன்மனத் துள்ளமர் கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய திருத்த னைப்புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே.
யாவ ருமறி தற்கரி யான்றனை மூவ ரின்முத லாகிய மூர்த்தியை நாவின் நல்லுரை யாகிய நாதனைத் தேவனைப் புத்தூர் சென்றுகண் டுய்ந்தேனே.
அன்ப னையடி யாரிடர் நீக்கியைச் செம்பொ னைத்திக ழுந்திருக் கச்சியே கம்ப னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் நம்ப னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே.
மாத னத்தைமா தேவனை மாறிலாக் கோத னத்திலைந் தாடியை வெண்குழைக் காத னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் நாத னைக்கண்டு நானுய்யப் பெற்றேனே.
குண்டு பட்டகுற் றந்தவிர்த் தென்னையாட் கொண்டு நற்றிறங் காட்டிய கூத்தனைக் கண்ட னைக்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் அண்ட னைக்கண் டருவினை யற்றேனே.
பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட மைந்த னைம்மண வாளனை மாமலர்க் கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே.
உம்ப ரானை உருத்திர மூர்த்தியை அம்ப ரானை அமலனை ஆதியைக் கம்பு நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் எம்பி ரானைக்கண் டின்பம தாயிற்றே.
மாசார் பாச மயக்கறு வித்தெனுள் நேச மாகிய நித்த மணாளனைப் பூச நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் ஈச னேயென இன்பம தாயிற்றே.
இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட் படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தேனே.
அரக்க னாற்றல் அழித்தவன் பாடல்கேட் டிரக்க மாகி அருள்புரி யீசனைத் திரைக்கொள் நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர் இருக்கு நாதனைக் காணப்பெற் றுய்ந்தேனே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சொர்ணபுரீசுவரர், தேவியார் - சொர்ணபுரிநாயகியம்மை.