Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.61 திருஅரிசிற்கரைப்புத்தூர் - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.61

திருஅரிசிற்கரைப்புத்தூர் - திருக்குறுந்தொகை

611

முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப் புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம் பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே.

612

பிறைக்க ணிச்சடை யெம்பெரு மானென்று கறைக்க ணித்தவர் கண்ட வணக்கத்தாய் உறக்க ணித்துரு காமனத் தார்களைப் புறக்க ணித்திடும் புத்தூர்ப் புனிதரே.

613

அரிசி லின்கரை மேலணி யார்தரு புரிசை நந்திருப் புத்தூர்ப் புனிதனைப் பரிசொ டும்பர விப்பணி வார்க்கெலாந் துரிசில் நன்னெறி தோன்றிடுங் காண்மினே.

614

வேத னைமிகு வீணையின் மேவிய கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம் போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை நாத னைந்நினைந் தென்மனம் நையுமே.

615

அருப்புப் போன்முலை யாரல்லல் வாழ்க்கைமேல் விருப்புச் சேர்நிலை விட்டுநல் லிட்டமாய் திருப்புத் தூரனைச் சிந்தை செயச்செயக் கருப்புச் சாற்றிலும் அண்ணிக்குங் காண்மினே.

616

பாம்பொ டுமதி யும்படர் புன்சடைப் பூம்பு னலும்பொ திந்தபுத் தூருளான் நாம்ப ணிந்தடி போற்றிட நாடொறுஞ் சாம்பல் என்பு தனக்கணி யாகுமே.

617

கனலங் கைதனி லேந்திவெங் காட்டிடை அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர் பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு புனலுஞ் சூடுவர் போலும்புத் தூரரே.

618

காற்றி னுங்கடி தாகி நடப்பதோர் ஏற்றி னும்மிசைந் தேறுவர் என்பொடு நீற்றி னையணி வர்நினை வாய்த்தமைப் போற்றி யென்பவர்க் கன்பர்புத் தூரரே.

619

முன்னு முப்புரஞ் செற்றன ராயினும் அன்ன மொப்பர் அலந்தடைந் தார்க்கெலாம் மின்னு மொப்பர் விரிசடை மேனிசெம் பொன்னு மொப்பர்புத் தூரெம் புனிதரே.

620

செருத்த னாற்றன தேர்செல வுய்த்திடுங் கருத்த னாய்க்கயி லையெடுத் தானுடல் பருத்த தோள்கெடப் பாதத் தொருவிரல் பொருத்தி னார்பொழி லார்ந்தபுத் தூரரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - படிக்காசுவைத்தநாதர், தேவியார் - அழகாம்பிகை.