Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.87 திருமணஞ்சேரி - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.87

திருமணஞ்சேரி - திருக்குறுந்தொகை

855

பட்ட நெற்றியர் பாய்புலித் தோலினர் நட்ட நின்று நவில்பவர் நாடொறுஞ் சிட்டர் வாழ்திரு வார்மணஞ் சேரியெம் வட்ட வார்சடை யார்வண்ணம் வாழ்த்துமே.

856

துன்னு வார்குழ லாளுமை யாளொடும் பின்னு வார்சடை மேற்பிறை வைத்தவர் மன்னு வார்மணஞ் சேரி மருந்தினை உன்னு வார்வினை யாயின ஓயுமே.

857

புற்றி லாடர வாட்டும் புனிதனார் தெற்றி னார்புரந் தீயெழச் செற்றவர் சுற்றி னார்மதில் சூழ்மணஞ் சேரியார் பற்றி னாரவர் பற்றவர் காண்மினே.

858

மத்த மும்மதி யும்வளர் செஞ்சடை முத்தர் முக்குணர் மூசர வம்மணி சித்தர் தீவணர் சீர்மணஞ் சேரியெம் வித்தர் தாம்விருப் பாரை விருப்பரே.

859

துள்ளு மான்மறி தூமழு வாளினர் வெள்ள நீர்கரந் தார்சடை மேலவர் அள்ள லார்வயல் சூழ்மணஞ் சேரியெம் வள்ள லார்கழல் வாழ்த்தவாழ் வாவதே.

860

நீர்ப ரந்த நிமிர்புன் சடையின்மேல் ஊர்ப ரந்த உரகம் அணிபவர் சீர்ப ரந்த திருமணஞ் சேரியார் ஏர்ப ரந்தங் கிலங்குசூ லத்தரே.

861

சுண்ணத் தர்சுடு நீறுகந் தாடலார் விண்ணத் தம்மதி சூடிய வேதியர் மண்ணத் தம்முழ வார்மணஞ் சேரியார் வண்ணத் தம்முலை யாளுமை வண்ணரே.

862

துன்ன வாடையர் தூமழு வாளினர் பின்னு செஞ்சடை மேற்பிறை வைத்தவர் மன்னு வார்பொழில் சூழ்மணஞ் சேரியெம் மன்ன னார்கழ லேதொழ வாய்க்குமே.

863

சித்தர் தேவர்கள் மாலொடு நான்முகன் புத்தர் தேரமண் கையர் புகழவே மத்தர் தாமறி யார்மணஞ் சேரியெம் அத்த னாரடி யார்க்கல்ல லில்லையே.

864

கடுத்த மேனி அரக்கன் கயிலையை எடுத்த வனெடு நீண்முடி பத்திறப் படுத்த லுமணஞ் சேரி யருளெனக் கொடுத்த னன்கொற்ற வாளொடு நாமமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - அருள்வள்ளல்நாயகர், தேவியார் - யாழின்மொழியம்மை.