Skip to content
Thiruvasagam & Thirukkovaiyar

எட்டாம் திருமுறை – திருவாசகம், திருக்கோவையார்

35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல்

மாணிக்கவாசகர்

35. அச்சப்பத்து - ஆனந்தமுறுத்தல் (தில்லையில் அருளியது - அறுசீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்)

516

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன் கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

517

வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன் இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம் திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

518

வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன் என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

519

கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன் வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித் துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

520

பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன் துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால் திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

521

வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன் தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன் தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும் ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

522

தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன் புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும் முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

523

தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன் வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச் செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

524

மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன் நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச் செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.

525

கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன் நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே.