Skip to content
Thiruvasagam & Thirukkovaiyar

எட்டாம் திருமுறை – திருவாசகம், திருக்கோவையார்

36. திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு

மாணிக்கவாசகர்

36. திருப்பாண்டிப் பதிகம் - சிவனந்த விளைவு (தில்லையில் அருளியது - கட்டளைக் கலித்துறை)

526

பருவரை மங்கைதன் பங்கரைப் பாண்டியற் காரமுதாம் ஒருவரை ஒன்றுமில்லாதவ ரைக்கழற் போதிறைஞ்சித் தெரிவர நின்றுருக் கிப்பரி மேற்கொண்ட சேவகனார் ஒருவரை யன்றி உருவறியா தென்றன் உள்ளமதே.

527

சதுரை மறந்தறி மால்கொள்வார் சார்ந்தவர் சாற்றிச் சொன்னோம் கதிரை மறைத்தனன் சோதி கழுக்கடை கைப்பிடித்துக் குதிரையின் மேல்வந்து கூடிடு மேற்குடி கேடுகண்டீர் மதுரையர் மன்னன் மறுபிறப் போட மறித்திடுமே.

528

நீரின்ப வெள்ளத்துள் நீந்திக் குளிக்கின்ற நெஞ்சங்கொண்டீர் பாரின்ப வெள்ளங் கொளப்பரி மேற்கொண்ட பாண்டியனார் ஓரின்ப வெள்ளத்துருக்கொண்டு தொண்டரை உள்ளங் கொண்டார் பேரின்ப வெள்ளத் துட் பெய்கழ லேசென்று பேணுமினே.

529

செறியும் பிறவிக்கு நல்லவர் செல்லன்மின் தென்னன் நன்னாட்டு இறைவன் கிளர்கின்ற காலமிக் காலம் எக் காலத்துள்ளும் அறிவொண் கதிர்வாள் உறைகழித் தானந்த மாக்கடவி எறியும் பிறப்பை எதிர்த்தார் புரள இருநிலத்தே.

530

காலமுண்டாகவே காதல்செய் துய்மின் கருதரிய ஞாலமுண்டானொடு நான்முகன் வானவர் நண்ணரிய ஆலமுண்டான்எங்கள் பாண்டிப்பிரான்தன் அடியவர்க்கு மூலபண்டாரம் வழங்குகின்றான்வந்து முந்துமினே.

531

ஈண்டிய மாயா இருள்கெட எப்பொரு ளும் விளங்கத் தூண்டிய சோதியை மீனவனுஞ் சொல்ல வல்லன் அல்லன் வேண்டிய போதே விலக்கிலை வாய்தல் விரும்புமின்தான் பாண்டிய னாரருள் செய்கின்ற முத்திப் பரிசிதுவே.

532

மாய வனப்பரி மேல்கொண்டு மற்றவர் கைக்கொளலும் போயறும் இப்பிறப் பென்னும் பகைகள் புகுந்தவருக் காய அரும்பெருஞ் சீருடைத் தன்னரு ளே அருளுஞ் சேய நெடுங்கொடைத் தென்னவன் சேவடி சேர்மின்களே.

533

அழிவின்றி நின்றதோர் ஆனந்த வெள்ளத் திடையழுத்திக் கழிவில் கருணையைக் காட்டிக் கடிய வினையகற்றிப் பழமலம் பற்றறுத் தாண்டவன் பாண்டிப் பெரும்பதமே முழுதுல குந்தரு வான்கொடை யேசென்று முந்துமினே.

534

விரவிய தீவினை மேலைப் பிறப்புழுந் நீர்கடக்கப் பரவிய அன்பரை என்புருக் கும்பரம் பாண்டியனார் புரவியின் மேல்வரப் புத்திக் கொளப் பட்ட பூங்கொடியார் மரவியல் மேல்கொண்டு தம்மையும் தாம் அறியார் மறந்தே.

535

கூற்றைவென் றாங்கைவர் கோக்களையும் வென்றிருந்தழகால் வீற்றிருந் தான்பெருந் தேவியுந் தானும் ஓர் மீனவன்பால் ஏற்றுவந் தாருயி ருண்ட திறலொற்றைச் சேவகனே தேற்றமிலாதவர் சேவடி சிக்கெனச் சேர்மின்களே.